| கெஹெல் பத்தரபத்மேவின் கைபேசியில் 13 சிறை அதிகாரிகளின் இலக்கங்கள்- மொடல் அழகிகள், அரசியல்வாதிகளின் படங்கள். [Wednesday 2026-08-26 09:00] |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோரலகமகே மனுதின பத்மசிரிபேரேரா எனும் கெஹெல் பத்தரபத்மேவின் கைத்தொலைப்பேசியிலிருந்து 13 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களின் தொலைபேசி இலக்கங்களும் மோடல் அழகிகள் உட்பட 7 அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர் |
இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நிதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் குறித்த நபர் 18 ஆவது சந்தேகநபரானக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதியன்று கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமையால் அன்றைய தினம் சந்தேகநபரை மன்றில் முன்னிலையப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். கடந்த வருடம் இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர் 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதியன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதோடு, தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். தற்போது அவரது தடுப்புகக்காவல் காலம் நிறைவடைந்துள்ளமையால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரியிருந்தனர். தொடர்ந்து விடயங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், கனம் நீதிவான் அவர்களே, சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் வரை தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டது. சந்தேகநபரிடமிருந்த கையடக்கத்தொலைப்பேசியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்ற போதிலும் அதன் தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. எனினும், அந்தத் தரவுகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் மீளப் பெற்றுக்கொண்டனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 8,441 தொலைபேசி அழைப்புகள், சுமார் 3 இலட்சம் புகைப்படங்கள், 5,031 காணொளிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 1,101 தொலைபேசி அழைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 20 பேர் பற்றிய தகவல்களும் அவரது கையடக்கதொலைபேசியிலிருந்தமை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த 20 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காகவும் தனித்தனியாக 20 வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சந்தேகநபர் இந்தோனேசியாவில் தங்கியிருந்த இடத்திலிருந்த 13 ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபரின் கையடக்கப்பேசியில் இருந்து 13 சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கங்கள் கண்டறியப்பட்டதுடன், மொடலிங் அழகிகள் உட்பட அரசியல்வாதிகள் 7 பேரின் புகைப்படங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இது குறித்து சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலம் பணவைப்பு செய்யப்பட்ட பெருமளவிலான சீட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரின் 17 வங்கி கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்களுடன் இவர் தொடர்புகளைப் பேணியமைக்கான தரவுகளும் அவரது கையடக்கத்தொலைப்பேசியில் கிடைத்துள்ளன. சந்தேகநபர் சட்ட விதிமுறைக்கமைய வெளிநாட்டிற்கு சென்று, பின்னர் போலி விசாக்களை தயாரித்து 13 நாடுகளுக்கு 15 தடவைகள் சென்றுள்ளார். அத்துடன், சந்தேகநபர் துப்பாக்கிகளை வைத்திருந்தமை தொடர்பிலும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விளக்கமளித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்த சந்தேகநபர் 18 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவத்திற்குரிய வழக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பத்தில், இந்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு கோருகின்றோம். மேலும், இவர் அக்குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் என்பதால், பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையொன்றில் சந்தேகநபரைத் தடுத்துவைப்பதுக்கான உத்தரவையும் பிறப்பிக்குமாறு கோரினர். அத்துடன், சந்தேகநபரை வைத்திய நிபுணர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்துமாறு சட்டவைத்திய அதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். சந்தேகநபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, எனது சேவைபெறுநருக்கு சிறைச்சாலையினுள் உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். மேலும், எனது சேவைபெறுநரை வெலிசரை சிறைக்குப் பதிலாக வேறு ஏதேனும் சிறைச்சாலையில் தடுத்துவைப்பதுக்கு உத்தரவிடுமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபருக்கு சிறைச்சாலையினுள் உரிய பாதுகாப்பை வழங்குமாறும், அது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேபோல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாட்சியங்களின் சுருக்கமான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. |
-
26 ஆக., 2026
www.pungudutivuswiss.com
