புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுகவை ஆதரிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன்
தெரிவித்தார். இதையடுத்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது குறித்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
பின்னர் கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற பிரசாரம் செய்வது என மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத் தலைவர், செயலர், இணைச் செயலர்கள், இளைஞரணி நிர்வாகி அடங்கிய 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.கட்சியின் துணைப்பொதுச்செயலர்கள் மு. சந்திரன், பெ. நல்லுச்சாமி, உயர்நிலைக்குழு உறுப்பினர் சுதாகர், மாநில தொண்டரணிச் செயலர் முத்துராமன் ஆகியோர் அடங்கிய மாநில தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்ற வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
முதல்வரை சந்தித்தபோது, மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். ஈழதமிழர் பிரச்னை, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டது போன்ற அதிமுகவின் சாதனையை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும். வாய்ப்பு கிடைத்தால் முதல்வருடன் பிரசாரம் செய்வேன்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 18 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளேன். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிக்குழுவினர் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்வார்கள்.மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் பணி ஆற்றும் என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் பொதுச்செயலர் ஜா. பிரிசில்லாபாண்டியன், பொருளாளர் அய்யாத்துரைபாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் கண்மணிமாவீரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ad

ad