புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கேரளத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களை தேர்ந்தெடுத்து வருவது அதிகரித்துள்ளது.
தேர்தல் நேரங்களில் பிரசாரம் செய்ய அரசியல் தலைவர்கள் பொதுக் கூட்டம், சுவர் விளம்பரம் மற்றும் வீடு வீடாக நேரில் சென்று வாக்கு சேகரிப்பது போன்ற நடைமுறைகளையே
பின்பற்றுவது வழக்கமாகும். ஆனால், தற்போது கணினி தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதாக ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தேர்தல் பிரசார நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் வழக்கத்தை அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்மாதிரியாக மத்திய அமைச்சர் சசி தரூர் தனது திருவனந்தபுரம் தொகுதியில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து ஃபேஸ்புக் வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பாக தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்குச் சென்று வழிபட்டது மற்றும் மத குருக்களிடமும், மத போதகர்களிடமும் ஆசி பெற்றது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆலத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ள பி.கே.பிஜுவும் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்கும்போது எடுத்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் இணையதளப் பக்கத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
கேரளத்தில் பெரும்பாலான வேட்பாளர்கள் வித்தியாசம் பார்க்காமல் மதத் தலைவர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வருகின்றனர்.
தேர்தல் பொதுக் கூட்டங்கள் நடத்த கேரளத்தில் தற்போது நிலவும் குளிர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக சமூக வலைதளங்களின் வாயிலாக பிரசாரம் செய்வது அங்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் நேரம் என்பதால் பந்தல் அமைக்கத் தேவையான பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் வருகை: இதனிடையே,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரத்துக்காக விரைவில் கேரளம் வரத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களும் அங்கு பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது அந்தக் கட்சிகளின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் செய்த நலத்திட்டங்களைக் கூறி மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க உள்ளதாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
""காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவின் மதவாத அரசியல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வன்முறை, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் ஆகியவை இடம்பெறும்'' என்று உம்மன் சாண்டி கூறினார்.
அதேவேளையில், கேரள காங்கிரஸ் அரசின் சூரிய மின்தகடு ஊழல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு,தவறான பொருளாதாரக் கொள்கை உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ad

ad