காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி அமைய ஆரம்பம் முதல் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். தற்போது இந்தக் கூட்டணி கைகூடி வந்து, தொகுதிப் பங்கீடும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டால் அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய
கட்சிகளை கூட்டணியில் இணைக்கச் செய்தேன். தற்போது அதில் வெற்றியடைந்திருக்கிறேன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால், எந்த கட்சிக்கும் ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை. மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யப் போவதில்லை. மேலும் பாஜக அணியினர் உரிய மரியாதையுடன் காந்திய மக்கள் கட்சித் தொண்டர்களை அணுகினால் மட்டுமே மோடியை பிரதமராக்கவும், அக்கட்சிகளை வெற்றிபெறச் செய்யவும் ஆதரவளிப்போம்.
பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபட்டால், மட்டுமே தமிழகத்தில் 10 முதல் 15 தொகுதியில் வரை வெற்றிபெற முடியும். இல்லையெனில் அது அதிமுக.வுக்கு சாதகமாக அமையும் என்றார்.
சுயநலக் கூட்டணி
இந்த கூட்டணி அமைய உழைத்த நீங்கள் தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியிருக் கிறேன், பிரச்சாரம் செய்ய மாட்டேன் எனக் கூறுகிறீர்களே, இதற்கு காரணம் தேமுதிகவா? அல்லது உங்களுக்கு தொகுதி தரவில்லை என்பதாலா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஜக கூட்டணியில் உள்ள விஜயகாந்த், வைகோ, பாஜக, ராமதாஸ் ஆகியோர் அவரவர் சுயநலத்துக்காக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தொகுதி பெற வேண்டும் என்ற அளவுக்கு நானும் எனது இயக்கமும் தரம் தாழ்ந்து போய்விடவில்லை. காந்திய மக்கள் இயக்கம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் இயக்கமாக பணியாற்றும் என்றார்.
மோடியை எதிர்த்து போராட்டம்
இதுதவிர பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை தீர்வு காணப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாஜக.வை எதிர்த்து நாங்கள்தான் முதலில் போராட்டம் செய்வோம்.
டெல்லி முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் நிர்வாகத்திறன் அற்றவர். தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி இல்லாமலே போகும். அதேபோல காங்கிரஸும், இடதுசாரிகளும் போலி மதச்சார்பின்மையை கையில் எடுத்துள்ளனர். எனவே பாஜக வேட்பாளர் மோடி பிரதமராக அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.