புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

மாயமான மலேசிய விமானம் தாலிபான் பகுதிக்குள் சென்றதா?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது தெளிவாகி உள்ள நிலையில், அந்த விமானம் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருக்கலாம்
என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வர்த்தக விமானங்களின் பாதையை கண்காணிக்கும் ராடார்களின் பார்வையிலிருந்து தப்புவதற்காக விமானத்தின் டிரான்ஸ்பான்டர் அணைக்கப்பட்டுள்ளதாக மலேசிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தகவல் தொடர்பு செயலிழக்கப்பட்ட பின்னர் அந்த விமானம் தாலிபான் ராடார்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள வடகிழக்கு பாகிஸ்தான் பகுதிக்கு அந்த விமானம் சென்றிருக்கலாம் என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன. 
இந்த தகவலின் அடிப்படையில் விசாரிப்பதற்காக தூதரக ரீதியிலான உதவிகள் கோரப்பட்டுள்ளன என்று மலேசிய விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே  காணாமல் போன விமானத்தை அதன் விமானியே கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில்,   ராடார் பார்வைக்கு சிக்காமல் இருப்பதற்காக 5000 அடிக்கும் கீழே அந்த விமானம் தாழ்வாக ஓட்டிச்செல்லப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

விமானி வீட்டில் சோதனை
இதற்கிடையே, விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு விமானம் ஓட்டி பயில்வதற்கான மாதிரி பயிற்சி கருவி ஒன்றும், மாதிரி விமான கட்டுப்பாட்டு அறையும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அதேபோல், உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

இதையடுத்து, விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதைத்தொடர்ந்து, மலேசிய போலீசார் தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா மற்றும் உதவி பைலட் அகமது ஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறும் வரை பதிவாகியுள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளில் தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானுக்கு தொடர்பா?
இந்நிலையில், ''இரண்டு ஈரானியர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணித்தது குறித்து ஆரம்பத்தில் விசாரணை அதிகாரிகள் சந்தேகப்பட்டது சரியானதே. அவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நிச்சயம் ஈரானுக்கு இதில் நேரடித் தொடர்பு உள்ளது என நான் கருதுகிறேன். அவர்கள்தான் விமானத்தைக் கடத்தியிருக்க வேண்டும். யாருமே செல்ல முடியாத இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். இதுதான் நடந்திருக்க முடியும்'' என இஸ்ரேலைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் ஐசக் எபட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொழில் நுட்ப சவால் நிறைந்ததாக உள்ளது. விமானத்தை தேடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட தேடும் பணி குறித்து வரைபடமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக மையங்கள் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
'ராடாரை தவிர்க்க தாழ்வாக ஓட்டிச் செல்லப்பட்டது'
இதனிடையே மாயமான விமானம் ராடார் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக, 5000 அடி உயரத்திற்கும் கீழே ஓட்டிச் செல்லப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து மலேசிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமாதிரியான தந்திரத்தை ராணுவ விமானங்களை ஓட்டும் விமானிகள்தான் கடைபிடிப்பார்கள் என்றும், எனவே நன்கு அனுபவம் வாய்ந்த விமானிதான் இந்த விமானத்தை கடத்தி இருக்க முடியும் என்பதால், விமானத்தை ஓட்டிச் சென்ற தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா மீதான சந்தேகம் மேலும் வலுப்பெறுவதாகவும் மலேசிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த 8 ஆம் தேதி சீன தலைநகர் பீஜிங்கிற்கு  239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அது புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்தில் மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனவும், பயணிகள் அனைவரும் பலியாகி இருக்கலாம் எனவும் அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ad

ad