புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம் 
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
இதன் மூலம் தான் இந்த நாட்டிலுள்ள இனவாத பேயில் இருந்து சிறுபான்மையினராகிய நாம் தப்பிக்க முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை, தர்காநகரில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர். அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஆட்சி பீடத்தில் மகிந்த ராஜபக்ச இருக்க வேண்டும்  என்பதற்காக போரை நடாத்தி தமிழ் மக்களை பல பத்தாயிரம் பேரைக் கொன்று குவித்துள்ளனர்.

இப்போது அதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு இருபவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீது கை வைக்க தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சிறுபான்மை மக்கள் மீதும் மதங்கள்  மீதும்  சிங்கள கிறிஸதவர்கள் மீதும்  தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றது..

சிங்கள பௌத்த இனவாதத்தை வைத்துக் கொண்டு தாம் தொடர்ந்தும் ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தான்  இந்த நடவடிக்கையில்  செய்து கொண்டுள்ளனர்.

எல்லா சிங்கள மக்களும் இந்த இன வெறியை ஆமோதிப்பவர்கள் அல்ல . அண்மையில் அளுத்கம தாக்குதல் தொடர்பில் கோட்டையில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்களது எண்ணிக்கை அதனை நிருபித்தது.

எனவே இந்த நாட்டில் இருக்கக் கூடிய சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு இனவாத ஆட்சியை விரட்டி அடிக்க  முன்வர வேண்டும்.

தர்கா நகர், பேருவளை போன்ற இடங்களில் அரச படைகளின் உதவியுடன்  வெறியாட்டத்தை நடாத்தி முடித்துள்ளனர். பெண்கள் , முதியவர்கள், குழந்தைகள் என எவரும் ஈவிரக்கமில்லாமல்  தாக்கப்பட்டனர். வீடுகள் கடைகள்  ,சேதமாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோல் உரிக்கின்ற இந்த நேரத்திலே முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சொல்ல முன்வர வேண்டும். இதன் மூலம் தான் இந்த நாட்டில் இனவாத பேயில் இருந்து நாங்கள்  தப்பிக்க முடியும்.

எனவே சிங்கள தமிழ் முஸ்லிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இனவாதம் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

ad

ad