தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின்
அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றுக்காலை அமெரிக்க வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலையுணவுச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”ஏற்கனவே தேசிய அரசாங்கம் ஒன்றுதான் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜேவிபியும் எதிர்க்கட்சியில் உள்ளன.
ஆனால், அவர்கள் எம்முடன் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அமர்ந்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னர், தாம் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, 100 நாள் செயற்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கூறியது.
இதையடுத்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் முடிவில், 10 நிபந்தனைகளின் அடிப்படையில், தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு இணங்கியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்