ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!
நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) நீங்கள் எத்தனை நாட்கள் வாதம் செய்வீர்கள்?
பவானி சிங்: நான் தாயாராகி வருகிறேன். ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்ததும் எத்தனை நாட்கள் வாதிடுகிறேன் என்பதைச் சொல்கிறேன்.
நீதிபதி: சுப்பிரமணியன் சுவாமி வாதத்தைப் பதிவுசெய்யப் போகிறாரா?
பவானி சிங்: சுப்பிரமணியன் சுவாமி அன்று போனவர்தான். எந்தத் தகவலும் இல்லை.
அப்படி வாதிட முடியாது
சுதந்திரம்: இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.6,91,81,200. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்காளாவின் மதிப்பு தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.5,40,52,298 என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் ரூ.1,30,52,259 தான் செலவானது. பொதுப்பணித் துறை பொறியாளர் சொர்ணம் தன் வாக்குமூலத்தில் சிறுதாவூர் பங்களாவுக்கு மதிப்பீடு செய்ய 25.10.1996 அன்று போகும்போது கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. கட்டட வேலைகள் ஆரம்பித்து சில நாட்கள்தான் இருக்கும். நாங்கள் சென்றபோது கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கட்டட மதிப்பீடு செய்த முறை சரியில்லை என்றும் கூறியிருக்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ன் படி 107 முதல் 120 அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும்போது எதன் அடிப்படையிலும் எங்களிடம் கேள்வி கேட்கப்படவில்லை.
நீதிபதி: குற்றவாளிகளின் 313 தன்னிலை விளக்கத்தைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் அதைப் படியுங்கள். உங்கள் தரப்பு மனுதாரர்களிடம் 650 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்விக்கும் முழுமையான பதிலளிக்காமல் ஆம், இல்லை என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். உங்கள் குற்றவாளிகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தைக்கூட முழுமையாகப் படிக்காமல் எப்படி வாதம் செய்கிறீர்கள்? அந்்த வாக்குமூலங்களை முதலில் படியுங்கள்.
சுதந்திரம்: படித்துவிட்டுத்தான் வாதிட வந்திருக்கிறேன். 100 சதவிகிதம் படித்துவிட்டு வர முடியாது.
நீதிபதி: கீழமை நீதிமன்றத்தில் பதிவுசெய்யாத வாக்குமூலங்களை நான் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரங்களைக் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். இது முக்கியமான வழக்கு. முக்கிய ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும்.
சுதந்திரம்: ஸாரி யுவர் ஆனர். நீங்கள் விரும்பும் விதத்தில் வாதிட முடியாது.
நீதிபதி: கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க முடியும்.
சுதந்திரம்: சிறுதாவூர் பங்களாவுக்கு வாங்கிய டைல்ஸ், மார்பிள்ஸின் விலை உயர்வாகக் கணக்கீடு செய்திருக்கிறார்கள். ஆனால் டைல்ஸ், மார்பிள்ஸ் வாங்கியது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் அதன் விலைகளைப் பற்றி தன் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார்.
நீதிபதி: நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதா?
சுதந்திரம்: ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிபதி: பிறகு இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள். நான் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வேன். நான் ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வேன். நான் ஏற்றுக் கொள்ளாததை நீங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் வைக்கும் வாதத்தில் 50 சதவிகிதத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது.
சூப்பர் டூப்பர் டி.வி-யில் என்ன நிகழ்ச்சி வரும்?
சுதந்திரம்: சூப்பர் டூப்பர் டி.விக்கு பல இடங்களில் இருந்து வருமானம் வந்தது. தமிழ்நாடு டூரிஸம் போர்டில் இருந்து ரூ.39,60,000 வருமானம் வந்தது. அதேபோல சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்தின் மூலம் கேபிள் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் 1,200 பேரிடம் இருந்து சந்தாவாக 1,10,00,000 வசூலிக்கப்பட்டது. அதை எங்கள் வருமானமாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எடுத்துக் கொள்ளவில்லை.
நீதிபதி: (குறுக்கிட்டு...) சூப்பர் டூப்பர் டி.வி எவ்வளவு முதலீட்டில் தொடங்கப்பட்டது.
சுதந்திரம்: சுதாகரனும், இளவரசியும் தலா மூன்று லட்சம் வீதம் ஆறு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, நிறுவனம் தொடங்கப்பட்டது.
நீதிபதி: ஆறு லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு எப்படி இவ்வளவு தொகையை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்தார்கள். நீங்கள் சொல்வது நம்பும்படியாக இல்லையே. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?
சுதந்திரம்: பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது.
நீதிபதி: என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்கள்?
சுதந்திரம்: நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் சொல்ல முடியாது.
நீதிபதி: ஆதாரங்கள் கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லையென்றால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். (பவானி சிங்கைப் பார்த்து...) இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
பவானி சிங்: சந்தாதாரர்களிடம் இருந்து டெபாசிட்டாக 1,10,00,000 வசூலித்தது சட்டத்துக்குப் புறம்பானது. வைப்புத்தொகை வாங்கக் கூடாது. வாங்கிய தொகையையும் வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.
சுதந்திரம்: வேறு வழியில் என்றால் எந்த வழியில் பயன் படுத்தினோம் என்பதைச் சொல்ல முடியுமா?
பவானி சிங்: நீங்கள் பேசி முடியுங்கள். என்னுடைய வாதத்தின்போது சொல்கிறேன்.
சுதந்திரம்: இது அரசியல் காழ்ப்பு காரணமாக போடப்பட்ட வழக்கு. ஏ2 முதல் ஏ4 வரை மூவருக்கும் சொந்தமாக கம்பெனிகள் இருந்தன. அதன் மூலம் கிடைத்த லாபத்தைக்கொண்டு சொத்துகள் வாங்கியுள்ளனர். இந்தச் சொத்துகள் அனைத்தும் ஏ1 ஜெயலலிதாவின் பணத்தில் வாங்கியதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். அதை உண்மை என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டத்துக்கு விரோதமாக சம்பாதித்த பணத்தில்தான் சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் சொத்துகளை வாங்கி இருக்கிறார்கள். இதைத்தான் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் நிரூபித்து, தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கும் விதமாக உங்கள் செயல்பாடு இருக்கிறதே தவிர, உங்கள் தரப்பு நியாயத்தை ஆதாரத்தோடும், ஆவணங்களைக் கொண்டும் வாதிட்டால் மட்டுமே நல்ல தீர்ப்பு வழங்க முடியும். நீங்கள் யாரும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. ஊழல் தடுப்பு போலீஸார் பொய் வழக்கு போட்டிருந்தாலும் குற்றவாளிகள் மீது சுமத்தப்படும் புகார் உண்மையா என்பதை அலசி, ஆராய்ந்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
அக்கா மகனுக்கு எப்படிக் கொடுத்தார்?
சுதந்திரம்: சுதாகரனின் வருமானத்தைத் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ரூ.82,75,000 என்று பதிவு செய்துள்ளது. ஆனால் அதில் ரூ.77,75,000 மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மூன்று லட்சம் ரூபாய் திரும்பத் திரும்பப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்குப் பல வகையில் வருமானம் வந்தது. சந்தாதாரர்கள் மூலம் கிடைத்த டெபாசிட் 1,10,00,000. தமிழ்நாடு டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மூலமாக ரூ.1,50,000.00, செட்டி நாடு சிமென்ட் கார்பரேஷன் ரூ.50,000.00, சசிகலா 5,44,000 ரூபாயை ஒரு முறையும், 11,00,000 ரூபாயை ஒரு முறையும் 25,56,000 ரூபாயை ஒரு முறையும் என மூன்று முறையாக ரூ.42,00,000த்தை சுதாகரனுக்குக் கொடுத்தார்.
நீதிபதி: எதன் அடிப்படையில் கொடுத்தார்?
சுதந்திரம்: அக்கா மகன் என்ற முறையில் கொடுத்தார்.
நீதிபதி: இந்தக் காலத்தில் அப்பா, மகன் கொடுக்கல் வாங்கல்களிலேயே பிரச்னையாகி நீதிமன்றம் வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் எந்த ஆவணங்களும் இல்லாமல் அக்கா மகனுக்குக் கொடுத்தார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? .
பைண்டிங் செய்தது யார்?
சுதந்திரம்: சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்கு பரணி பீச் ரிசார்ட் ரூ.22 லட்சம் லோன் கொடுத்தது. அதை சுதாகரனின் வருமானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை வருமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல லெக்ஸ் பிராப்பர்ட்டி மூலம் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் லோன் வாங்கப்பட்டது. சுதாகரனுக்கு ரூ.20 லட்சம் லோன் மட்டும்தான் வந்தது. அதனால் ரூ.20 லட்சத்தை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. (இதற்கான நகல்களை நீதிபதியிடம் கொடுத்தார்.)
நீதிபதி: (நகல்களைப் பார்த்து) முன்னாள் முதல்வரின் வழக்கில் தாக்கல் செய்கிற நகல்களை யார் இவ்வளவு கவனக்குறைவாக பைண்ட் செய்தது?
சுதந்திரம்: நாங்கள்தான் செய்தோம்.
நீதிபதி: இதை எப்படி விரித்துப் படிப்பது? என்ட்ரிகள் அனைத்தும் பைண்டிங் உள்ளே இருக்கிறது. சரியாக பைண்ட் செய்து கொடுங்கள்.
'என் நான்கு பாயின்ட்கள்!'
சுதந்திரம்: நிறைவாக நான் நான்கு பாயின்ட்களைச் சொல்ல விரும்புகிறேன்.
1. கூட்டுச் சதி 120(பி) மற்றும் குற்றம் செய்ய உடந்தையாக இருத்தல் 109 இந்த வழக்குகள் என் மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இவர்கள் கூட்டுச் சதியிலும், குற்றம் செய்ய உடந்தையாகவும் செயல்படவில்லை.
2. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகப்படுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக என் மனுதாரர்களின் சொத்துகளையும் இதில் இணைத்திருக்கிறார்கள்.
3. என் மனுதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் சொத்துகள் இருந்தன. லோன் வாங்கி, தொழில்கள் நடத்தி வந்துள்ளனர்.
4. ஜெயலலிதாவின் பணம் மற்ற குற்றவாளிகள் யாருக்கும் நேரடியாகவோ, வங்கிகள் மூலமாகவோ வரவில்லை. சசிகலா, சுதாகரன், இளவரசி வாங்கிய சொத்துகள் ஜெயலலிதா பணம்தான் என்பதற்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எந்த ஓர் ஆதாரங்களையும் நிரூபிக்கவில்லை.
எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். நான் இத்தோடு என்னுடைய இறுதி வாதத்தை நிறைவு செய்கிறேன்.
சுமக்க முடியவில்லை யுவர் ஆனர்!
குமார்: ஏ1 முதல் ஏ4 வரையிலான அனைத்து வாதங்களும் முடிந்துவிட்டன. இன்னும் கம்பெனி வழக்கு மட்டுமே பாக்கி இருக்கிறது. அதனால் எங்கள் தரப்பு ஆவணங்களை இங்கு வைத்துவிட்டுச் செல்ல தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.
நீதிபதி: ஏன் எடுத்துக்கொண்டே போய்விடலாமே?
குமார்: 166 வால்யூம் இருக்கின்றன. அதிக சுமையாக இருப்பதால் சுமக்க முடியவில்லை.
நீதிபதி: சரி வைத்துவிட்டுப் போங்கள். நாளைக்கு ஏதாவது பிரச்னை என்றால் என்னை கேட்கக் கூடாது.
குமார்: கேட்க மாட்டோம்.
நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) திங்கள்கிழமையில் இருந்து வாதிடுகிறீர்களா?
பவானி சிங்: வழக்கைப் படிப்பதற்காக ஐந்து நாட்கள் அவகாசம் வேண்டும்.
நீதிபதி: உச்ச நீதிமன்றம் தினம்தோறும் நடத்தி வழக்கை முடிக்கச் சொல்லி இருக்கிறது. கம்பெனி வழக்கு முடிந்ததும் நீங்கள் வாதிட வேண்டும்.!
கம்பெனி வழக்கு வாதம் நடக்கிறது!