புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை

வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற
பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ‘நியூயோர்க் டைம்ஸ்’ நாளிதழில், GARDINER HARRIS எழுதியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’
தேர்தலின் மூலம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டு  ஒரு மாதம் கடந்த நிலையில் சிறிலங்காப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தனது பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். இவர் தற்போது பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், நூற்றுக்கணக்கான அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கும், உள்நாட்டு யுத்தத்தின் போது ஆக்கிரமிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழ் மக்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பான விவகாரங்களைத் தற்போது தான் கையில் எடுத்துள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் வைத்து வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் திரு.சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட திரு.ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் தனது பணிகளை அங்கு ஆரம்பித்தார்.
சிறிலங்காவுக்கு பாப்பரசர் வருகை தந்திருந்த போது தனது பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் முதல் இரு வாரங்களும் வரவு செலவுத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ‘அதன் பின்னர் தற்போது மூன்று வாரங்கள் மட்டுமே கடந்துள்ளன. தற்போது தான் நாங்கள் பிற பணிகள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்’ என தனது நேர்காணலில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக சிறிலங்காவின் சிறைகளில் தற்போது எத்தனை அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாகவும் சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் எத்தனை ஏக்கர் நிலங்களை இலகுவாக மீண்டும் மக்களிடம் கையளிக்க முடியும் என்பது தொடர்பாகவும் தன்னிடம் தெளிவான புள்ளிவிபரங்கள் தற்போது இல்லை என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கைதிகள் தொடர்பான பரீட்சார்த்தப் பட்டியல் ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
‘அரசியற் கைதிகள் தொடர்பான இறுதிப் பட்டியலைத் தயாரிப்பதற்கு முன்னர் இதனை இரண்டு தடவைகள் மீளாய்வு செய்து உறுதிப்படுத்த விரும்புகிறேன். இதனை மார்ச் மாதத்திற்குள் இது இறுதி வடிவமாக்கப்படும்.
இரகசிய முகாம்களில் கைதிகள் வைக்கப்பட்டிருந்தால் அந்த முகாங்களை மூடிவிட்டு அங்குள்ளவர்களை நீங்கள் கூட்டிச்செல்ல முடியும்’ என இவர் குறிப்பிட்டார்.
2009ல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போது பல பத்தாயிரக்கணக்கான மக்கள் காணாமற் போயினர். இவர்களுள் போர்க்களங்களில் கொல்லப்பட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.
ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தற்போதும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீண்டகாலமாக வதந்தி ஒன்று நிலவுவதாகவும், ஆனால் இதில் எவ்வித உண்மையில்லை எனவும் திரு.விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
‘ஆனால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் சில நூறு வரையிலாகும். ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை.
காணாமற்போன மக்களின் பெயர்கள் வேறேங்கும் காணப்படவில்லை. அதாவது இவர்கள் தற்போது நாட்டில் உயிருடன் வாழ்பவர்கள் மத்தியிலோ அல்லது நாட்டை விட்டு வெளியேறியவர்களின் பெயர்ப் பட்டியலிலோ காணாமற் போனவர்களின் பெயர்கள் காணப்படவில்லை’ எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளை விடுவித்தல் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவித்தல் போன்றன தாமதமாகுவது குறித்து அண்மைய வாரங்களில் தமிழ் செயற்பாட்டாளர்கள் சிலர் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி இம்மாதம் வடக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை இத்தீர்மானத்தில் பயன்படுத்தியதானது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
போரின் போதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு காலதாமதம் ஏற்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போது அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரேயே வடக்கு மாகாண சபை தனது தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
இக்கோடை காலத்தின் போது நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பெரும்பான்மை சிங்களவர்களின் கோபத்தைச் சம்பாதிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பாததன் காரணத்தாலேயே இவர் அரசியற் கைதிகள் தொடர்பான விபரத்தை வெளியிட மறுக்கிறாரோ எனத் தான் அச்சப்படுவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கொழும்பு இல்லத்தில் வைத்து வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பது வரலாறாக உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதன் காரணத்தால் காலத்திற்கேற்ப நடந்துகொள்ளப் பிரதமர் விரும்புகிறார்’ என திரு.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியற் கைதிகளின் விபரங்கள் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் கூட, அரசியற் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலர் உடனடியாக விடுவிக்கப்பட முடியும் என திரு.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
‘இத்தாமதத்திற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும். இவர்கள் யார் என்பதை எவரும் அறிய முற்படவில்லை. இவர்கள் தொடர்பாக அறியவேண்டிய கேள்விகள் தொடர்பாக அதிகாரிகள் தம்மிடையே அச்சுறுத்தப்படலாம்’ என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர பிறிதொரு நேர்காணலில் தெரிவித்தார்.
திரு.ராஜபக்ச எதேச்சதிகார ஆட்சியை மேற்கொண்டிருந்தார். உயர் வர்த்தகத் தலைவர்கள் உட்பட கொழும்பின் முக்கிய தரப்பினர் மத்தியில் ராஜபக்ச ஆட்சி கவிழ்க்கப்பட்டமை மிகவும் மன நிம்மதியைக் கொடுத்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தால் எதிர்ப்புக்களைச் சந்தித்த மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தால் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.
இதற்கு முன்னர் அதாவது 1990களிலும் 2000ம் ஆண்டின் முற்பகுதியிலும் இரண்டு தடவைகள் சிறிலங்காப் பிரதமராகப் பணியாற்றிய திரு.விக்கிரமசிங்க மேற்குலக நாடுகளுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதை முன்னுரிமைப்படுத்தியிருந்தார்.
‘நான் இறுதியாக பிரதமராகப் பதவி வகித்த போது, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பியிருந்தோம். இதனை ராஜபக்ச அரசாங்கம் அழித்துள்ளது. இவர்கள் மேற்குலகை எதிர்த்தனர். இந்தியாவுடனான உறவையும் விரிசலாக்கினர். சீனா தான் தமது மீட்பர் என ராஜபக்ச அரசாங்கம் கருதியது’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
சீன ஒப்பந்தகாரர்கள் ராஜபக்ச ஆட்சியின் போது வீதிகளை நிர்மாணித்ததுடன், துறைமுகங்களை விரிவாக்கினர். இதற்காக மிகப் பெரிய தொகையில் கடன்கள் பெறப்பட்டன. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் இரண்டு தடவைகள் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான அனுமதியை ராஜபக்ச அரசாங்கம் வழங்கிய போது இது இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது.
இத்திட்டங்களை மீளாய்வு செய்வதாக புதிய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது. சீனாவின் திட்டங்கள் சில ஊழல் நிறைந்தது என சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எரன் விக்ரமட்ன குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மில்லியன் டொலருக்கும் குறைவான வீதிகள் ஒவ்வொரு அரை மைல் தூரத்திற்குமான அதன் உண்மையான செலவின் ஆறு மடங்கு செலவாகக் காண்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதியை முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் தமது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியதாகவும் திரு.சமரவீர தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
‘நாங்கள் ஏற்கனவே 2 மில்லியன் டொலர்கள் ஊழல் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக நாங்கள் தற்போது உலகவங்கி மற்றும் சில நாடுகளின் நிதிப் புலனாய்வு அமைப்புக்கள் போன்றவற்றுடன் கலந்துரையாடி வருகிறோம்’ என திரு.சமரவீர தெரிவித்தார்.
7000 இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடம், மூன்று உயர் மட்ட அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தக்கூடிய அறைகள், சிறிய நீச்சல் தடாகம் உட்பட அலரி மாளிகையை விரிவுபடுத்துவதற்காக முன்னைய அரசாங்கம் பல மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது.
திரு.ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வெளியிட முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் பிரதமர் தற்போது ஊடகவியலாளர்களை அலரி மாளிகைக்குள் அனுமதிக்கிறார்.
கடந்த வாரம் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா அல்லது இல்லையா என்பது தொடர்பாக இதுவரை திரு.ராஜபக்ச தெளிவானதொரு அறிவித்தலை விடுக்கவில்லை.
திரு.ராஜபக்சவின் எதிர்கால அரசியற் பிரவேசம் தொடர்பாக திரு.விக்கிரமசிங்க நிச்சயம் கொள்ளவில்லை. ‘திரு.ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவார் என நான் நினைக்கவில்லை. எனக்கு அவரை நன்றாகத் தெரியும்’ என திரு.விக்கிரமசிங்க தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad