எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும். இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசீரே தவிர, முஸ்லிம் காங்கிரஸின் பசீர் அல்ல என்று முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி முஹைதீன் மாதிரிக்கிராமத்தை திறந்துவைத்த பின்னர் "இம்முறையும் பசீர் வெல்லுவாறு; அது எப்படியென்று மேடையில் சொல்லுவாரு" என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
நாங்கள் முகாமிலே இருந்தவேளை எங்களை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எங்களின் பின்பக்கத்தில் தட்டியெழுப்பி விட்டு அந்த முகாமின் முற்றத்தை சுத்தம் செய்து, ஒரு பீங்கான் தட்டில் சோற்றை பிசைந்து தந்ததற்கு பின்னர் எங்களை உடற்பயிற்சி செய்யுமாறு பணிப்புரை வழங்கிய தலைவனே எனக்கு அரசியல் கற்றுத்தந்த ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
அது மட்டுமல்லாமல் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணத்துக்கு பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை காப்பாற்றுவதற்கான வலுவையும் அறிவையும், ஞானத்தையும், புலனாய்வுத் திறனையும் எனக்கு தந்ததும் ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
முஸ்லிமாகவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்துகொண்டு ஈரோஸின் தலைவர் பாலகுமாரை விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதியது சரிதானா என பலர் தன்னிடம் கேட்பது சம்பந்தமாகவே நான் பாலகுமாரைப் பற்றி இங்கு உரையாற்ற கடமைப்பட்டுள்ளேன்.
நான் இயக்கத்தில் இருக்கும்போது பாலகுமாரிடம் கற்றுக்கொண்ட அனுபவப்படிப்பு, அரசியல், ஆயுதம், வியூகம், புலனாய்வுத்துறை என்பனவே முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் காப்பாற்ற எனக்கு உதவியது. முதன் முதலில் வன்னி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம் என்றால் ஈரோஸ் தலைவன் பாலகுமாரின் குடும்பமே.
இப்போதும் எனக்கு அரசியல் கற்றுத்தந்த தலைவன் பாலகுமார் உயிருடன் இருக்கின்றார் என்ற சந்தேகம் இருக்கின்றது. ஏனென்றால் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் பாலகுமாரை கொண்டுவந்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியினை பசில் ராஜபக்ஷவினால் கேற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது.
பஷில் ராஜபக்ஷ நினைப்பதுபோல தன்மானமிழந்த, இடம் மாறித்திரிகின்ற தலைவனாக நான் பாலகுமாரை பார்த்ததில்லை. பாலகுமார் மக்களுக்காக போராடுபவன். சுத்தமான அரசியல் செய்யபவன், தத்துவவாதி, நான்கண்ட தமிழ் தலைவர்களில் உன்னத தலைவன்.
என்னுடைய பார்வையில் சொல்லப்போனால், தந்தை செல்வாவை விடவும் பெரும் தலைவன். எனக்கு உயிரூட்டியவர், உணர்வூட்டியவரும் அவரேயாவார். முதன் முதலில் எனக்கு பாராளுமன்ற பதவியை ஈரோஸ் தந்திராவிட்டிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்னை கணக்கெடுத்தும் பார்த்திருக்காது.
நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள். ஆகையால், எமது மார்க்கத்தில் மாற்றுமத்தினர் செய்த உதவிகளை மறக்கச்சொல்லி எந்த இடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா?ஆகையால் பாலகுமாரின் உயிருக்காக குரல் கொடுப்பது எனது தார்மீகப் பொறுப்பாகும்.
பாலகுமார் அண்ணனையும், அவருடைய மகன் சூரிய தீபனையும் என்னால் வெளியில் கொண்டுவர முடியுமாக இருந்தால் எனது பாராளுமன்ற பதவியைக் கூட தூக்கியெறிவதற்கு தயாராக உள்ளதாக மிக உணர்ச்சிவசப்பட்டவாராக பசீர் சேகுதாவூத் உரையாற்றினார்.
அவருடைய பிள்ளைகள் எனது பிள்ளைகளைப் போன்றவர்கள் என்றே நான் எப்போதும் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆகவே எமது முஸ்லிம் சமூகம் இவ்வாறு நாங்கள் செய்கின்றோம் என பெருமைப்பட வேண்டும். அதனை தமிழ் சமூகம் அங்கீகரிக்கவும் வேண்டும்.
- See more at: http://www.thuruvamnews.com/