வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டில்ஷான், சங்கக்காராவின் மிரட்டல் சதத்தின் மூலமாக 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான் மற்றும் லஹிரு திரிமான்னே களமிறங்கினர்.
இருவரும் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். மொர்டசா வீசிய முதல் ஓவரில் திரிமான்னே கொடுத்த பிடி வாய்ப்பை ‘சிலிப்’ பகுதியில் கோட்டை விட்டனர் வங்கதேச வீரர்கள். இதைப்பயன்படுத்திக் கொண்ட திரிமான்னே அரைசதம் கடந்தார்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போது லஹிரு திரிமான்னே 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சங்கக்காராவும், டில்ஷானும் அசத்த ஆரம்பித்தனர். வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக கையாண்டனர். சங்கக்காரா தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார்.
மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷானும் அரைசதம் கடந்தார். சங்கக்கரா 60 ஓட்டங்களில் கொடுத்த எளிய வாய்ப்பை நழுவவிட்டார் மோமினுல் ஹக்.
இதனால் சங்கக்காரா சதம் அடித்தார். இருவரும் ஜோடி சேர்ந்து 210 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டில்ஷான் ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஓட்டங்களை எட்டினார். இவர் 146 பந்துகளில் 161 ஓட்டங்களை குவித்தார். சங்கக்காரா 105 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.
வங்கதேசம் 333 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
|