புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்


உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், "உண்மையை முதலில் அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்க வழி வகுக்கலாம்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து, "நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை" என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் முகமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.
விக்கினேஸ்வரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
எம் மக்களுக்கு நடந்ததை வெளியிடுவதை இனவாதம் என்று பிரதமர் சொல்லியிருப்பது வருத்தத்தைத் தருகின்றது. உண்மை கூறுவது ஒருபோதும் இனவாதமாக முடியாது. இனவாதத்தை வேண்டுமானால் உண்மை இது தான் என்று குறிப்பிட்டுக் காட்டலாம். அதனைத்தான் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட எமது பிரேரணை எடுத்துக்காட்டியது.
உண்மை தெரிந்தால்த்தான் நல்லெண்ணம் பிறக்க உதவி புரியலாம். தென் ஆபிரிக்கவில் Truth And Reconciliation Commission என்ற ஆணைக்குழு உண்மைக்கும் நல்லெண்ணத்துக்குமான ஆணைக்குழு என்றே அழைக்கப்பட்டது. முதலில் உண்மையை அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்க வழி வகுக்கலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை காலதாமதம் செய்வதற்கு உங்களுக்கு சார்பாக சர்வதேசம் முற்படுகின்றது என்பதை அமெரிக்க பிரதிநிதியிடம் இருந்து அறிந்து கொண்டதன் பின்னர் தான், எமது பிரேரனையை நாங்கள் கொண்டுவந்தோம்.
எமது மனோநிலையை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே அந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. வண்டிலை முன்வைத்து குதிரையை பின்வைப்பது போல் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை முன்னரே அறிந்து அந்த நேரத்தில் கொண்டுவந்த பிரேரணைக்கு, உலக நாடுகள் கன்னத்தில் அடித்தது என்று பிரதமர் ரணில் கூறியது வியப்பாக இருக்கின்றது.
அரசியல் கலாசாரத்தை மாற்றுங்கள் என்று நான் கோரியதற்கு எமக்களிக்கப்பட்ட பிரதமரின் பதில் இது என்று தெரிகின்றது. எங்கள் மக்கள் உண்மையான நல்லெண்ணத்தை தெற்கில் இருக்கும் எவரிடமும் எதிர்பார்க்க முடியாது என்று சொல்வதனை உண்மை ஆக்கப்பார்க்கிறார் பிரதமர்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்களின் அரசியல்வாதிகள்தான் இதுகாலமும் அவர்களை பிழையான விதத்தில் வழி நடத்தி வந்துள்ளார்கள்.
உதாரணத்துக்கு சந்திரிகா அம்மையார் 2000ம் ஆண்டு நல்லதொரு அரசியல் யாப்பு நகலைக் கொண்டுவந்த போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் அந்த நகலை யார் எரித்தார்கள் என்பது நான் சொல்லி பிரதமர் ரணிலுக்குத் தெரியவேண்டியதில்லை.
குறுகிய கால சுய நன்மைக்கே அதை செய்தார்கள். நாட்டு நலன் கருதி அல்ல. தயவு செய்து இனவாதம் வேண்டாம் என்று கோரி விட்டு நீங்களே இனவாதத்தை எழுப்பாது பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்கள் பெருவாரியாக உங்களுக்கு ஆதரவளித்ததை மறந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ad

ad