கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பிணையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கமலேந்திரனுக்கு யாழ். மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் தானியல் றெக்சியன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தலையில் சூட்டுக்காயத்துடன் அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் உட்பட மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாராலும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி கைது செய்யப்பட்ட கமலேந்திரன் , ரெக்சியனின் மனைவி அனிதா மற்றும் முச்சக்கர வண்டிச்சாரதி ஆகிய மூவரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.
எக்காரணம் கொண்டும் யாழ்.மாவட்டத்தில் இருக்கமுடியாது என்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் வாரத்திற்கு ஒரு தடவை கையொப்பம் இடவேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்றும் சாட்சிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி க.சிவபாதசுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கமலேந்திரன் தனது சட்டத்தரனி முடியப்பு றெமீடியஸ் மன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்கண்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாத்தின் முதலாம் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பம் இட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்