-

21 ஆக., 2026

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தி.மு.க

www.pungudutivuswiss.com
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம்பெற இருப்பதாக, வடமாநில ஊடகங்களில் வெளியான செய்திகளால், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த, 2021 முதல் ஐந்தாண்டுகள், தமிழகத்தில் இருந்த தி.மு.க., அரசுக்கும், மத்திய பா.ஜ., அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும், தி.மு.க.,வினர் கடுமையாக எதிர்த்தனர். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க.,வை, 'மோடி, அமித்ஷாவின் அடிமை' என, விமர்சித்தனர்.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்த பின், தமிழக அரசியல் களத்தில் காட்சிகள் மாறின. 22 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே, த.வெ.க., கூட்டணியில் இணைந்தது.

மேலும், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் த.வெ.க., பக்கம் சாய்ந்தன. இதனால், தி.மு.க., தனித்து விடப்பட்டுள்ளது.

தி.மு.க.,வை பொறுத்தவரை, கடந்த காலங்களில், தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்துள்ளது. இரு கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாத போது, வி.பி.சிங்கின் ஜனதா தளம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்துள்ளது.

இப்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க., கூட்டணியில் இருப்பதால், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வுடன் கரம் கோர்க்க, தி.மு.க., தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மோடி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த தி.மு.க., இப்போது, 'லோக்சபாவில் தமிழக பிரதிநிதித்துவ சதவீதம் குறையாமல் இருந்தால் ஏற்போம்' என்ற அளவுக்கு இறங்கி வந்துள்ளது.

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யான கனிமொழி சோமு, 'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை' என்றார்.

சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் விஜய், 'தி.மு.க., ஆட்சியில், மூன்று துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்த கோப்புகள் என் மேஜையில் உள்ளன; தேவைப்படும் போது வெளிடுவேன்' என்றார். தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலர், ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில், பா.ஜ., ஆதரவு தேவை என தி.மு.க.,வில் பலரும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என, பா.ஜ.,வும் கருதுவதாக கூறப்படுகிறது.

விரைவில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது தி.மு.க.,வும் அதில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பேச்சு நடந்து வருவதாகவும், வடமாநில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ad

ad