புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013




           ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா டெல்லியில் ஒரு சட்டப் போராட்டமே நடந்திருக்குது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக ஜெ. தரப்பும் தி.மு.க தரப்பும் காத்துக்கிட்டிருக்குது.''


""விசாரணையின்போது இரண்டு தரப்பிலும் வாதங்கள் கடுமையாகவும் வலுவாகவும் இருந் திருக்குதே..''

""ஆமாங்க தலைவரே.. இன்னார்தான் அரசு வக்கீலா இருக்கணும்னும், இன்னார்தான் நீதிபதியா நீடிக்கணும்னும் குற்றம்சாட்டப்பட்டவரே சொல்லும் விசித்திரமான வழக்கு இது. அதை சுப்ரீம்கோர்ட் எப்படி அனுமதிச்சதுன்னு இன்னைக்கும் சட்ட வல்லுநர்கள் விவாதிச்சிக்கிட்டிருக்காங்க. அதேநேரத்தில், ஜெ.வுக்கு இந்த ஆலோசனையை சொன்னவர் யு.ஜி.லலித். இவர் 2ஜி கேஸில் அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடுபவர். இந்த  கேஸில் குற்றம் சாட்டப்பட்டவங்க இவர் வாதாடக்கூடாதுன்னு எதிர்ப்பு தெரிவிச்சப்ப, லலித்தே இதில் வாதாடலாம், நாங்க பாதுகாப்பளிக்கிறோம்னு நீதிமன்றம் உத்தரவாதம் கொடுத்தது. அந்த அடிப் படையில்தான், சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வக்கீல் பவானிசிங் தொடர அனுமதி வாங்கலாம்னு எதிர்பார்த்து பெட்டிஷன் போடப்பட்டது. லலித்தான் ஜெ. சார்பில் முதலில் ஆஜரானார். ஆனா அவரோட வாதங்கள் ஜெ. தரப்புக்குத் திருப்தி தரலை. அத னால முகுல் ரஸ்தோகிங்கிற வக்கீலை நியமிச்சாங்க. அவரோ அரசு வக்கீலையும் நீதிபதியையும் குற்றம்சாட்டப்பட்டவரே தேர்வு செய்வது அபத்தம்னு சொல்லி ஒதுங்கிட்டாரு. அதற்கப்புறம்தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த  சேகர் நெப்பாடே ஜெ. தரப்பில் ஆஜரானார்.''

""எல்லோருமே படுபிஸியான வக்கீல்களாச்சே.''

""ஒரு முறை ஆஜரானாலே 25லட்ச ரூபாய் ஃபீஸ் வாங்குறவங்க. கிட்டதட்ட 4சி வரைக்கும் செலவாகியிருக்குதாம். ஜெ.வுக்காக ஆஜரான நெப்பாடே, காங்கிரஸ் கட்சி தனது கூட்டாளியான தி.மு.க.வுக்கு சாதகமா, கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வக்கீலை நீக்கியிருக்குது. இந்த கேஸில் பவானிசிங் நீடிக்கணும். அதுபோல, நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்புத் தரணும். சொத்துக்குவிப்பு வழக்கில் 30ஆயிரம் பக்கங்களுக்கு ஆவணங்கள் இருப்பதால புதுசா அரசு வக்கீலோ நீதிபதியோ நியமிக்கப்பட்டால் அவர்கள் இதைப் படிக்கவே ஒரு வருடம் ஆகும். ஜெ. இந்த வழக்கை விரைந்து முடிக்க நினைக்கிறார்னு வாதாடினாரு. அவருக்கு நீதிபதிகள் பாப்டேவும் சவ்ஹானும் நீண்ட நேரம் வாதாட அனுமதி கொடுத்து, அவரோட வாதங்களை உன்னிப்பாக் கேட்டாங்க.''

""அதற்கு அரசுத் தரப்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது?''

""மத்திய அரசு சார்பாகவும் கர்நாடக அரசு சார்பாகவும் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜரானாரு. பவானி சிங்குக்கு அதிக சம்பளம் கொடுக்கப் பட்டதை சுட்டிக்காட்டினாரு. முன்னாள் அரசு வழக்கறிஞர்  ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஏற்காமல், அவரைத் தொடர்ந்து நீடிக்கச்சொன்ன கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி விக்ரம்ஜித்சென், சுப்ரீம்கோர்ட் நீதிபதியான வேகத்தில், கர்நாடக ஹைகோர்ட் பொறுப்புத்தலைமை நீதிபதி ஸ்ரீதர்ராவ், ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஏற்றுக்கிட்டு உடனடியா பவானிசிங்கை நியமித்தார். கர்நாடக அரசு கொடுத்த பேனலில் பவானிசிங் பெயரே இல்லை. அப்படிப்பட்டவரை ஸ்ரீதர்ராவ் ஏன் நியமித்தார் என்பதே சந்தேகத்திற்குரியது. மாநிலத்தில் புது அரசு அமைந்ததும் இந்த நியமனம் பற்றி விசாரித்தது. ஹைகோர்ட் தலைமை நீதிபதி அனுமதியுடன்தான் பவானி சிங் நீக்கப்பட்டிருக்கிறார். இது சட்டப்படி நடைபெற்ற சம்பவம். இதில் கேள்வி கேட்க, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதுபோல நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கேட்கும் உரிமையும் கிடையாது. சட்டத்தைவிட யாரும் உயர்வானவர்கள் இல்லைன்னும் வாகன்வதி வாதாடினாரு.''

""சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதுக்கு காரணமே தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுதானே.. அவர் தரப்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது?''

""வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறுமாநிலத்திற்கு மாற்றணும்னு சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டபோதே, இந்த மனுவைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிக்கு உரிமையுள்ளதுன்னும் அவங்கதான் ஓர் அரசை கண் காணிக்கக்கூடியவர்களாக இருக்கமுடியும்னு சுப்ரீம்கோர்ட் சொன்னதையும், அப்போது வழக்கின் ஆவணங்களை ஜெ.வின் வீட்டிற்கே கொண்டு சென்று கையெழுத்துப் பெற்றது  உள்ளிட்ட முறைகேடுகளை சுப்ரீம்கோர்ட் சுட்டிக்காட்டியதையும் நினைவுபடுத்தி வாதாடிய பேராசிரியர்  தரப்பு வக்கீலான முன்னாள் சொலிசிட்டர் விகாஸ்சிங், ஜெ. தரப்புக்கு ஆதரவாக அரசு வக்கீல் பவானிசிங் எப்படியெல்லாம் செயல்பட்டார் என ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு பேராசிரியர் அனுப்பிய கடிதத்தில் இருந்த பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார். அந்தக் கடிதம் பற்றி நம்ம நக்கீரன்தான் ஏற்கனவே டீடெய்லா சொல்லியிருக்குது. அதுபோல, நீதிபதி ஓய்வு பெறுவதால் வழக்கின் விசாரணை பாதிக்காதுன்னும் பாலகிருஷ்ணாவும்கூட இந்த  வழக்கில் ஐந்தாவதாக நியமிக்கப்பட்ட நீதிபதிதான்ங்கிறதையும் சுட்டிக்காட்டினார். சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ரொம்ப கவனமா எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவச்சிட்டாங்க.''

""இதற்கிடையில் ஸ்பெஷல்  கோர்ட்டுக்கு புது நீதிபதியா முனிகவுடர்ங்கிறவரை நியமிச்சிட்டதா செய்தி வந்ததே?''

""அந்தத் தகவல் வந்ததும் தி.மு.க தரப்பு சந்தோஷப்பட்டது. ஜெ. தரப்பு ஷாக் ஆனது. ஆனா அது வெறும் டெம்பரரி நியமனம்தானாம். ஒரு கவர்னர் மாற்றப்பட்டால், புது கவர்னர் வரும்வரை பக்கத்து மாநில கவர்னர் கூடுதலா பொறுப்பை கவனிச் சிக்கிறமாதிரி, நீதிபதி ஓய்வுபெறும்போது இன்னொருவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுப்பாங்க. அதுதான் நடந்திருக்குது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தொடரப்பட்ட சொத் துக் குவிப்பு வழக்குங் கறதால ஸ்பெஷல் கோர்ட்டுக்கு புது நீதி பதியை நியமிக்கணும்னா முறைப்படி ஜி.ஓ. போடப்படணும். அதெல்லாம் எதுவும்  நடக்கலை.''

""சுப்ரீம் கோர்ட் வழக்கின் போக்கு பற்றி ஜெ.வோட மனநிலை என்னவாம்?''

""இதுதான் தன் னோட பிரதமர் கனவை யும் அரசியல் எதிர் காலத்தையும் தீர்மானிக் கும் வழக்குன்னு உறுதி யா நம்பும் ஜெ. சில நேரங்களில் நம்பிக்கையா இருந்தாலும் அடிக்கடி டென்ஷனாயிடுறாராம். சென்னை தியாகராய நகரில் உள்ள அகத்தியர் கோயிலில் இந்த கேஸ் நல்லபடியா முடியும்னு தொடர்ச்சியா பூஜை கள் நடந்து தினமும் கார்டனுக்கு பிரசாதம் கொண்டுவரப்படுவது வழக்கம். ஜனாதிபதியோடு சினிமாவிழாவில் கலந்துக்கிட்ட ஜெ., கார்டனுக்குத் திரும்புனப்ப பிரசாதத்தோடு ஒரு ஆச்சாரியார் காத்திருந் திருக்கிறார். ஆனா ஜெ அவர்கிட்டே முகம் கொடுக் கலை. அரைமணிநேரம் கழிச்சி சசிகலாதான் வந்து பிரசாதத்தை வாங்கிட்டுப் போனாராம். கேஸ் விஷ யத்தில் எல்லாம் சரியா யிடிச்சின்னு நம்ம வக்கீல்கள் சொல்றாங்களே தவிர, எதுவும் சரியானதா தெரிய லைன்னு ஜெ. கோபமா பொங்கியிருக்காரு. தீர்ப்பு எப்படி வருமோன்னு பதட்டத்தோடு இருக்கார்.''

""கோட்டையில் தொடர்ச்சியா நடந்த துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள்கூட கடந்த சில நாட்களா நடக்கலையே.. சுப்ரீம் கோர்ட் கேஸ் எஃபெக்ட்தானா?''

""அப்படித்தான்னு கோட்டை அதிகாரிகள் சொல்றாங்க. ஆனா, ஆய்வுக்கூட்டம் நடந்த போது அதில் ரொம்ப சீரியஸாகவே கவனம் செலுத்தினாராம் ஜெ. எந்தத் துறையின் ஆய்வோ அந்தத் துறை யின் மந்திரி, அதிகாரிகள் இவங்களோடு நால்வர் அணி மந்திரிகளும் ஜெ. தலைமையில் கலந்துக் கிட்டாங்க. ஒவ்வொரு துறை சார்பிலும் மக்க ளுக்கு பிடித்தமான என்னென்ன திட்டங் களை அறிவிச்சி, எம்.பி. தேர்தலில் ஓட்டு வாங்கலாம்ங்கிறதுதான் ஆய்வுக்கூட்டத்தின் நோக்கம். எம்.பி. தேர்தல் மே மாசமும் வரலாம். முன்கூட்டியும் வரலாம்னு சொன்ன ஜெ., மார்ச் மாத பட்ஜெட் கூட்டத் தொடர் வரை காத்திருக்கவேண்டியதில்லை, நவம்பர் கூட்டத்தொடரிலேயே துறைரீதியான அறிவிப்புகளை வெளியிடணும். அதற்காக இப்பவே ரெடியாயிடுங்க. ஜனவரிக்குள் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, அப்படியே ஓட்டுகளாக மாற்றி 40 இடங்களையும் ஜெயித்தாகணும்ங்கிறதுதான் அவரோட சிங்கிள் பாயிண்ட்.''

""ஓ..''

""கனிமவளம் தொடர்பா ககன்தீப்சிங்பேடி தலைமையிலான டீம் ஜெ.விடம் கொடுத்த அறிக்கையோடு, வி.வி.மினரல்ஸ் தரப்பிடமிருந்தே ஜெ. ஒரு அறிக்கையை வாங்கியிருக்காரு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தப்ப, குவாரிகளை அரசாங்கமே ஏற்று நடத்தினால் 40ஆயிரம்  கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்னு தெரியவந்திருக்குது. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலமா போன வருடம் கிடைத்தது 22ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனால, எம்.பி. தேர்தலில்  பெண்கள் ஓட்டுகளை அள்ளுறதுக்கு வசதியா, டாஸ்மாக் கடைகளை மூடிடலாமான்னு அதிகாரிகளோடு ஜெ. ஆலோசனை நடத்தி யிருக்கிறார்.''

""அவங்க என்ன சொன்னாங்களாம்?''




""டாஸ்மாக் வருமானம்ங்கிறது ஈஸியா கிடைக்கக்கூடியது. அதன் அளவையும் வருடத்துக்கு வருடம் உயர்த்தமுடியும். அதை வைத்துதான் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை சிரமமில்லாமல் கொடுக்குறோம். கனிமவளம்ங்கிறது அப்படியல்ல.. வருடாவருடம் அதன் அளவு குறையும். சுற்றுச்சூழல் விதிகள் உள்பட பல பிரச்சினைகள் இருக்குதுங்கிறதை அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. எம்.பி. தேர்தல் வரைக்கும் டாஸ்மாக்குக்கு பூட்டு போட்டுவிட்டு, ஜெயிச்சபிறகு திறந்துக்கலாமேன்னுகூட ஆலோசனை நடந்தும், இப்போதைக்கு அந்த ரிஸ்க் வேண்டாம்னு விட்டுட்டாங்களாம்.''

""ம்..''

""பீர் பாட்டிலா இருந்தாலும், விஸ்கி-பிராந்தி வகை பானங்களா இருந்தாலும் 12 பாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு 50 ரூபாய்னு கட்சி நிதி போகுது. 65லட்சம் பெட்டிகள் மாதந்தோறும் விற்பனையாகுதாம். அதன்படி பார்த்தால் மாதத்துக்கு 32 கோடியே 50 லட்சம் நிதி கிடைக்குது. வருடத்துக்கு 390 கோடி ரூபாய். ஆட்சியிலிருக்கிற 5 வருடத்தில் 1950 கோடி ரூபாய் கட்சி நிதியா கிடைக்கும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குத் தயக்கம் ஏற்பட இதுதான் காரணம்னு நீங்க நினைச்சிடக்கூடாதுங்க தலைவரே..''

""நினைக்கலப்பா.. நினைக்கலப்பா.. நினைக்கவேயில்லை.''…

""தி.மு.க ஏரியாவுக்கு வர்றேன். 2ஜி தொடர்பான ஜே.பி.சி. அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருது. இதை ஏற்கமுடியாதுன்னும் மேலும் பல ஆவணங்களைத்  தரணும்னும் ஜே.பி.சி. தலைவர் சாக்கோவுக்கு தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் மேல கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்கிறாரு. இந்த நேரத்தில், ஜே..பி.சி.யில் உள்ள சி.பி.எம். எம்.பி.யான சீதாராம் யெச்சூரி ஒரு மாற்று அறிக்கையையே 36 பக்கத்துக்குக் கொடுத்திருக்காரு. அதில் பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கணும்ங்கிறதை அழுத்தமா வலியுறுத்தியிருப்பதோடு, அவர்களின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதுன்னு ஆ.ராசா தெரிவித் திருப்பதற்கு எழுத்துப்பூர்வமாக வாவது அவங்க பதில்  தரணும்னு யெச்சூரி வலியுறுத்தியிருக்காரு. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி தருவது, 2ஜி வழக்கில் தனியா சிக்கிக் கொண்டு தவிக்கும் தி.மு.கவுக்கு ஆறுதலைக்  கொடுத்திருக்குது.''

""நானும் டெல்லி தகவலோடு தான் லைனில் இருக்கேன். ஜெ தலைமையில் ஓர் அணியை உருவாக்கி நாடாளுமன்றத் தேர் தலை  சந்திப்பதற்காக அ.தி.மு.க தரப்பிலிருந்து நடந்த மூவ்வில் சரத்யாதவ், தேவகவுடா, சந்திர பாபுநாயுடு, அஜீத்சிங் இப்படி பலபேர்கிட்டேயும் ஆதரவு கேட்டிருந்தாங்க. இவங்களோடு ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் ஜெ.வின் பெயரை முன்னிறுத்தச் சொல்லி தேர்தலை சந்திக்கலாம்ங் கிறதுதான் கணக்கு. இதில் பக்கத்து மாநிலத்துக்காரரான சந்திரபாபுநாயுடு திடீர்னு டெல்லியில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்திச்சிப் பேசி யதில் அ.தி.மு.க தரப்பு அப்செட். டெல்லித் தலைவர்களோ, ஜெ. மீதான சொத்துக்குவிப்பு கேஸை காரணமா வச்சி அவரை முன்னிறுத்துவதில் தயங்குறாங் களாம்.''

படம் : எஸ்.பி.சுந்தர்

 லாஸ்ட் புல்லட்!

பள்ளிக்கூட சிறுவர் சிறுமிகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ், காலணிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கடந்த மாதம் வெளியிட்டது தொடக்கக் கல்வி இயக்குநரகம். இந்த டெண்டரில் கலந்து கொண்டுள்ள காலணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கனமான சூட்கேஸ்களுடன் இயக்குநரகத்தை நெருங்கியிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் மொத்த தொகுதிகள் 30. இதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 16. இவர்களில் 8 பேர் காங்கிரசுக்குத் தாவ ரெடியாகிவிட்டார்கள். காங்கிரசிடம் ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் 15 எம்.எல்.ஏக்கள் என்ற பலத்துடன் வெளியிலிருந்து யாராவது ஒருவரை இழுத்து ஆட்சியைப் பிடித்துவிடமுடியும். யார் முதல்வர் என காங்கிரசுக்குள் நடக்கும் போட்டியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், நமசிவாயம் ஆகியோர் சீரியஸாக இருக்கிறார்கள். மேலிடம் இதில் ஒரு முடிவு கண்டால் என்.ஆர்.காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தயவில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பு உருவாகிவிடும். மக்கள் தந்த மெஜாரிட்டியை கெடுத்துக்கொண்டார் தற்போதைய முதல்வர் ரங்கசாமி என்கிறார்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

அறிஞர் அண்ணா ராஜ்யசபா உறுப்பினரானபோது அவருக்கு உதவியாக டெல்லி சென்ற சம்பத், பின்னர் முரசொலி மாறனுக்கும் துணையாக இருந்தார். டெல்லி சம்பத் என்றே அழைக்கப்பட்ட அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தைக் கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டார். டெல்லி  நிலவரம் பற்றி நமக்கு சரியான தகவலைச் சொல்வது சம்பத்தான் என்று கலைஞர் சொல்வது வழக்கம். உடல் நலன்குன்றியிருந்த  டெல்லி சம்பத் கடந்த 24-ந் தேதி மரணமடைந்தார். கலைஞர் இரங்கல் தெரிவிக்க, மு.க.ஸ்டாலின், சம்பத்தின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வி.பி.சிங்கிற்கு நெருக்கமானவராக இருந்த சம்பத்துக்கு பல தலைவர்களும் பழக்கம். பேங்க் ஆஃப் பரோடாவில் ஒரு தொழிற்சாலைக்காக அவர் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் வீடு ஏலத்திற்கு வந்தது. இதையடுத்து, நிதியமைச்சர் ப.சியிடம் தயங்கித்தயங்கி சம்பத்  பேச, உங்களுக்கு உதவுவது எனக்குக் கிடைத்த வாய்ப்பு எனச் சொல்லி மும்பையிலிருந்த வங்கி சேர்மனிடம் ப.சி உடனடியாகப் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தர, அதைத் தொடர்ந்து சம்பத்தும் சேர்மனை சந்தித்துப் பேசினார். வட்டி ரத்து செய்யப்பட்டு அசலைக் கட்டும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட, அதன்படியே கடனைக் கட்டினார் சம்பத். நிலைமை சுமுகமானதை அறிந்த ப.சி., டெல்லி  சம்பத்திடம் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம்.

ad

ad