-

16 செப்., 2026

www.pungudutivuswiss.com
"சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் விஜய்" - சகாயம் ஐஏஎஸ் காட்டம்!
[Wednesday 2026-09-16 07:00]

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு அவர் செய்த தாடை சைகையும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக விஜய் ஏற்கனவே விளக்கம் தந்துவிட்ட பிறகும் இந்த சர்ச்சை ஓயவில்லை. இதற்கிடையே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இது தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி காலம் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்

அப்போது ஸ்டாலினின் மிசா கைது மற்றும் சிறை அனுபவத்தை குறிப்பிட்டதுடன், அப்போது தடையில் கை வைத்தும் ஒரு சைகையை செய்தார். இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதாவது திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் அவர் மீது மிக கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது தடை உடைந்தது. அதை குறிப்பிடும் வகையிலேயே விஜய் இதுபோல செய்ததாக பெரியளவில் சர்ச்சை வெடித்தது. விஜய்யின் பேச்சு மற்றும் சைகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த போராட்டங்களில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக ஸ்டாலினும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட விதம், சிறையில் தான் அனுபவித்த தாக்குதல் உள்ளிட்டவற்றை வீடியோ மூலம் விளக்கினார். சிறையில் தாக்கப்பட்டதில் தனது தாடை உடைந்ததாகவும், அந்த காயத்தின் பாதிப்பு இன்றும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நிர்மல் குமார் இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவரிடம் மிசா தடுப்புக்காவல் ஆணை இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

ஸ்டாலினை தியாகியாக சித்தரிப்பதாக குறிப்பிட்டிருந்தார். நிர்மல் குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு முழுக்க எதிர்ப்புகள் வந்தது. பல்வேறு தரப்பினரும் நிர்மல் குமார் இதுபோல பேசியது தவறு என சாடினர். இன்னும் சிலர் இப்போது இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசாமல் எப்போதோ நடந்தது குறித்து பேசுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், முதல்வர் விஜய்யின் சைகை தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சகாயம், "திமுக மீது விமர்சனம் உண்டு.

ஆனாலும், முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாடையில் தாக்கப்பட்டு, அது நிரந்தரமான ஒரு காயத்தை ஏற்படுத்தி பலவீனத்தை ஏற்படுத்தியதை கிண்டல் செய்கின்ற வகையில் அப்படி பேசியிருப்பதை ஏற்பதற்கு அல்ல, நிராகரிக்கிறேன். சிறுபிள்ளைத்தனமாக! எனவே, தமிழக சட்டசபை என்பது தமிழ் மக்களுடைய பண்பாட்டு தளம்; அது மாட்சிமை மிகுந்த ஒரு இடம். அந்த இடத்தில் நாம் சிறுபிள்ளையாக... சிறுபிள்ளைத்தனமாக இது போன்ற செயலில் விஜய் ஈடுபடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியிருந்தார். சகாயத்தின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு தரப்பினர் அவரது பேச்சை ஆதரிக்கும் அதேநேரம் தவெக ஆதரவாளர்கள் அதை மிக கடுமையாக சாடி வருகிறார்கள்.

ad

ad