| தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சி! [Friday 2026-09-18 07:00] |
![]() நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் |
'ஜே.ஆரின் அரசாளுகையும் நடுத்தர பாதையும்' எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கத்தால் முதன்முறையாக ஏற்பாடு செய்த கருத்தாடல் நிகழ்வு நேற்று மாலை தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பல்வேறு காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூதாட்டங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கான இணைவாக இந்த இணைவு அமையாது. பதவிகளை பகிர்ந்து கொள்ள, அரசியல் சலுகைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அருவருப்பான, கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைகின்றன. மக்கள் சார்பான முற்போக்கான கொள்கைச் சட்டகத்தின் ஊடாக இந்த இணைவானது நிகழும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்கள் பரிதவித்துப்போயுள்ளனர். நாட்டில் தற்சமயம் சர்வாதிகார வேட்கையுடன் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்து முற்றிலுமாகப் பரிதவித்துப்போயுள்ள 220 இலட்சம் மக்கள் நாட்டுக்கு ஒரு மாற்றீட்டைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஜே.ஆர். ஜயவர்தனவின் நடுத்தர பாதையையே நாமும் பின்பற்றுகிறோம். நாட்டுக்குரிய ஒரே எதிர்காலப் பயணம் வலதுசாரியோ இடதுசாரியோ அல்ல, மாறாக நடுத்தரப்பாதையில் அமைந்த பயணமேயாகும். ஜே. ஆர். ஜயவர்தனவின் நடுத்தர பாதையையே நாமும் பின்பற்றுகிறோம். ஜே. ஆர். ஜயவர்தனவின் தலைமையின் கீழ் ரணசிங்க பிரேமதாச கம் உதாவ திட்டத்தையும், லலித் அத்துலத்முதலி மகபொல திட்டத்தையும், காமினி திஸாநாயக்க மகாவலி திட்டத்தையும், ரணில் விக்ரமசிங்க யவுன்புர திட்டத்தையும் முன்னெடுத்தனர். ஜே. ஆர். ஜயவர்தன முதலாளித்துவத்தை சந்தைப் பொருளாதாரத்தின் வழியே சென்று மனிதநேய முதலாளித்துவத்தைக் கடைப்பிடித்தார். நாம் பின்பற்றுவதும் இந்த நடுத்தரப்பாதையைத் தான் என தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் இடதுக்கு சிக்னல் காட்டிவிட்டு, இந்த அரசாங்கம் இப்போது வலதின் பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. கம்யூனிஸ்ட் நாடுகள் கூட முதலாளித்துவத்தின் மூலம் செல்வத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த முதலாளித்துவத்தில் காணப்படும் பேதங்கள் வசதியுள்ளவர்கள் - வசதியற்றவர்கள் என்ற இடைவெளியை ஏற்படுத்துவதால் நாம் மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுகிறோம். இதுவொரு சமூக நலன்புரி அரச எண்ணக்கருவாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடதுக்கு சிக்னல் காட்டிவிட்டு, தற்போது வலதின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இவ்வாறு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் சென்றால் மக்கள் பலத்தாலும் மக்கள் சக்தியாலும் இவர்களின் பயணத்தை நாம் தோற்கடிப்போம். சோசலிசம் இப்போது தோல்வியடைந்துள்ளது. நாட்டின் எதிர்காலப் பயணத்திற்குத் நடுத்தரப் பாதையே சிறந்தது. சோசலிசம் எவ்வாறு தோல்வியடைந்துள்ளது என்பதை வட கொரியா மற்றும் கியூபாவைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம். இந்த முதலாளித்துவத்துடன் மனிதநேய முதலாளித்துவத்தைச் சேர்த்து சமூக ஜனநாயகத்தை உள்வாங்க வேண்டும். இந்தப் பொதுப் பயணத்தின் ஊடாக சீரழியும் நாட்டுக்கு உயிர் கொடுத்து, மக்கள் சக்தியால், மக்கள் ஆதரவால், மக்களின் பங்கேற்புடன் அரசியல் பொருளாதார ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். யார் வேண்டாம் என்று கூறினாலும் நாட்டுக்கு நலன்புரி அரசு அவசியமாகும். இந்நாட்டில் நலன்புரி அரசு அமைந்து காணப்படுகின்றது. இதனை அறியாதவர்கள் தகவல்கள் தெரியாத முட்டாள்கள். ஐக்கிய இராஜ்ஜியத்தில் கூட இத்தகைய நலன்புரி அரசு அமைந்து காணப்படுகின்றது. நாட்டுக்கு நலன்புரித் திட்டம் அவசியமாகும். அது தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டும். மக்களுக்காக நாம் ஒன்றிணைவோம். இன்று நாட்டில் 30-40 சதவீதமானோர் வறுமைக்கோட்டில் வாழ்கின்றனர். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ள இக்கட்டத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையும். சரியான வேலைத்திட்டத்துடன் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். 220 இலட்சம் மக்களின் பொது எதிரியான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றாய் அணிதிரள வேண்டுமென கூறியுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
-
18 செப்., 2026
www.pungudutivuswiss.com
