-

6 பிப்., 2026

கோட்டா இன்றும் வழக்கிற்கு வரவில்லை - எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News [Friday 2026-02-06 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    

யாழ். நீதவான் நீதிமன்றில் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டுள்ள நிலைமையில் அவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ். நீதவான் நீதிமன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, இணைய வழியில் சாட்சியம் அளிக்க தயார் என மன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும், அதன் பின்னர் ஜனாதிபதியான பின்னரும் யாழ்ப்பாணம் வந்து சென்ற நிலையில், வழக்கு விசாரணைக்காக வருவதை தவிர்ப்பதனை வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

அதனால், மன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சத்திய கடதாசி ஊடாக மன்றுக்கு தெரிவிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதிலும் கோட்டபாய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகவில்லை.

அதனை அடுத்து இரு தரப்பு சட்டத்தரணிகளும் எழுத்து மூல சமர்ப்பனங்களை செய்யுமாறு மன்று கட்டளையிட்டு, வழக்கினை மார்ச் மாதம் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும் அனைத்துக் காணாமலாக்கப்படல்களுக்கும் நீதியை நிலைநாட்ட கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில், செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், PTA ஐ நீக்கு, அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமையை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ad

ad