| சங்கு கூட்டணியின் செயற்குழுக் கூட்டம்! [Saturday 2026-10-10 08:00] |
![]() மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது |
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் (10) காலை 10.00 மணியளவில் வவுனியாவில் நடைபெறவிருப்பதாக அக்கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சமத்துவக்கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின்போது விசேடமாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான விதத்தில் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்காமை என்பன குறித்தும் இதன்போது ஆராயப்படவிருப்பதுடன், இதனை தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் தீர்மானிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வை நோக்கிய நகர்வுகள் பற்றியும் இக்கூட்டத்தில் பேசப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
-
10 அக்., 2026
www.pungudutivuswiss.com
