ஐந்து கொலைச் சம்பவங்கள் - பிள்ளையானுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தொடர்பான வழக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்திரகாந்தன் நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை பரிசீலித்த நீதிபதி, சந்திரகாந்தனை எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக இன்று நிகழ்நிலை ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு ரி -56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களுடன் சந்திரகாந்தன் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Weniger anzeigen