அபய குலசேகரன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் வழி காட்ட, தில்லையில் இருந்த தேவார ஏடுகளைக் கண்டெடுத்து நம்பியாண்டார் நம்பிகள் முதல் ஏழுதிருமுறைகளைத் தொகுத்து வழங்கினார். திரு எருக்கத்தம் புலியூரில் வாழ்ந்து வந்த, திருநீல கண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த, இறையருள் பெற்ற பெண் ஒருத்தி தேவாரப் பாடல்களுக்குப் பண்களை வகுத்து வழங்கினார். தேவாரப் பண்களின் பெயர்களையும், அவற்றின் உட்பட்ட சந்த வேறுபாடுகள் குறித்த கட்டளைகளையும், உமாபதி சிவசாரியார் இயற்றிய திருமுறைகண்ட புராணம் விரித்து உரைக்கிறது. |
3.1.2 தேவாரம் - பண்முறை - தலமுறை பத்துப்பாடல்கள் கொண்ட தொகுப்பைப் ‘பதிகம்’ என்று கூறுவர். இது முன்னரே விளக்கப்பட்டது. மூவர் தேவாரங்கள் பதிக அமைப்பை உடையன. திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன் கூறும் ஒரு பாடலும் பதிக இறுதியில் இடம் பெற்றுள்ளது. இதனைத் ‘திருக்கடைக்காப்பு’ என்று கூறுவர். மற்றைய இருவர் பதிகங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய பதிகங்கள் பத்துப்பாடல்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தேவார மூவரும் பல சிவத்தலங்களில் சென்று பாடியிருந்தாலும், அவற்றை எல்லாம் தொகுத்துப் பண்களின் அடிப்படையில் ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் ‘பண்முறை’ என்று கூறுவர். மூவர் தேவாரங்களைத் தலமுறையிலும் தொகுத்துள்ளனர். ஒரே தலத்தில் பலரும் பாடிய பாடல்களை ஒழுங்கு அமைத்தலைத் 'தலமுறை' என்றனர். ஏழு திருமுறைகள் என்ற தொகுப்புப் பண்முறையிலேயே அமைந்தது. அதாவது, ஓர் ஆசிரியர் வெவ்வேறு தலங்களில் பாடியிருந்தாலும், ஒரே பண்ணில் அமைந்த பதிகங்கள் தொகுக்கப்பட்டுத் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன..1.3 தேவாரப்பண்கள்
தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள் இருபத்து ஒன்று. இதனைப் ‘பந்தத்தால்’ என்று தொடங்கும் திருக்கழுமலம் (சீகாழி) பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். பின்வந்தோர் பண்களை இருபத்து நான்கு என்றும் இருபத்து ஏழு என்றும் பிரித்துக் கூறினர். இவற்றைப் பகற்பண்கள், இராப்பண்கள், பொதுப் பண்கள் என மூன்றாகப் பிரிப்பர். பகற்பண்கள் பத்து. இராப்பண்கள் எட்டு. பொதுப்பண்கள் மூன்று. (இவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் விரிவாகக் காணலாம்.)