புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2019

மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்,மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஒக்டோபர் 10ம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109ம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தது.

அது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரியிடம் மன்று கேள்வி எழுப்பியது. எனினும் அவர் விசாரணைகள் நிறைவடையவில்லை என்று மன்றுரைத்தார்.

அதனால் விசாரணையை விரைவுபடுத்தி உரிய அறிக்கையை வரும் 10ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றுவரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்

ad

ad