ஈழத்தமிழினத்தின் உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டபோதெல்லாம் அந்தக்குரலுக்கு சாட்சியாக நின்ற அரசியல் பயணமும் ஈழத்தமிழினத்தின் விடுதலை வேட்கையை சுமந்த அவரின் உறுதியும் காலத்தின் பக்கங்களில் அழியாத தடங்களாக பதியப்படும். தமிழீழ தேசத்தின் பெருமதிப்பிற்குரிய "தேசப்பற்றாளா்" அமரர் திரு.சிவாஜிலிங்கம் அவா்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக தன்வாழ்நாளை அர்ப்பணித்த உன்னதமான ஓர் மனிதர். அன்னாருடைய இழப்பு தமிழ் ஈழ தேசவிடுதலையின் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அமரர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஈழவிடுதலை வரலாற்றி்ன் ஆவணமாக கருதப்படவேண்டிய உயர்ந்த மனிதர். தமிழ் ஈழ தேசியத்தின் விடியலுக்காகவும், மீட்சிக்காகவும் அவர் ஆற்றிய மகத்தான பணிகள் தமிழீழ வரலாற்றில் என்றும் பதியப்பட்டிருக்கும். அவர் ஓர் போராளியாக, அரசியல்வாதியாக இருந்த காலங்களில் இருந்து இறுதி நாட்கள்வரை ஈழ தேசத்தின் மீதான சமரசமற்ற பற்றுறுதியை தனது இறுதி மூச்சுவரை கட்டிக்காத்த ஓர் பெருமைக்குரிய மனிதராக வாழ்ந்து காட்டியவர். தமிழ்மக்களுக்கு எங்கெல்லாம் துன்பங்களும், அநீதிகளும் இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவரது குரல் ஓங்கி ஒலித்தது. பாராளுமன்றம், மாகாணசபை, நகரசபை, முதல் சர்வதேச அரங்குகள் வரை தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளையும், அவலங்களையும் எடுத்துரைத்தவர். அரசியல் எல்லைகளையும், பதவிகளையும் கடந்து தமிழ்மக்களின் தேசிய உணர்வையும், ஈழவிடுதலையையும் தன் வாழ்வின் முக்கிய இலட்சியமாக கொண்டு செயல்பட்ட ஓர் தேசப்பற்றாளர். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தபோதும் அடிபணியாத தலைமகனார். அரசியல் என்பது கட்டமைக்கப்பட்ட கட்சி அரசியல் ஒன்றல்ல, மக்களுக்காக களங்களில் நின்று சற்றும் பின்வாங்காது தமிழ்தேசியப்பரப்பில் நெஞ்சுரத்தோடு நின்று செயலாற்றியவர். அமரர் அவா்கள் வல்வெட்டித்துறை மண்ணின் பெருமைக்கு உரியவரான “தேசியத்தலைவர்” அவா்களின் பெற்றோர்களின் இறுதிக்கிரிகைகளை மிகச் சவால் மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் பெருந்துணிச்சலுடனும், வீரத்துடனும் முன்னின்று நிறைவேற்றிய அவரது நெஞ்சுரத்தை தமிழினம் என்றும் மறக்கமுடியாததொன்றாகும்.v அமரர் அவா்கள் வடமாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் “தமிழர்கள் இனப்படுகொலை"க்கு ஆளானர்கள் என்ற தீர்மானத்தை வடமகாண சபையில் நிறைவேற்றிய பெருமைக்குரியவராவார். இதனைவிட “பொதுவாக்கெடுப்பு" ஒன்றின் மூலமாகவே தமிழர் இனப்பிரச்சனைக்கு நிதந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர். தமிழ் தேசியம் என்பது வெறும் அரசியல் முழக்கம் அல்ல அது தமிழ் தேசிய இனத்தின் அடையாளம், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் மற்றும் விடுலைக்கான வேட்கை என்பதை தனது செயல்பாடுகளால் நிரூபித்து காட்டியவர். அவரது மறைவு அவரது வாழ்வை முடிவுக்கு கொண்டுவருமே தவிர அவர் விதைத்த இலட்சியங்களை ஒருபோதும் அழிக்க முடியாது. அமரர் சிவாஜிலிங்கம் ஐயா அவா்கள் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஈழ தேசியப்பற்றுடனும், தியாகத்துடனும் வாழ்ந்து மறைந்த அவரின் பிரிவால் துயருறும் அவரது துணைவியார், ஏனைய குடும்ப உறவினர்களுக்கும் அவரை ஆழமாக நேசித்த அனைத்து தமிழ் தேசியப்பற்றாளா்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களையும், வீரவணக்கத்தையும் மரியாதையுடன் செலுத்திநிற்கின்றது. “உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதா்களை மரணம் என்றும் அழித்து விடுவது இல்லை" தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். |