| பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு! [Wednesday 2026-10-07 07:00] |
![]() அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது. |
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் செவ்வாய்க்கிழமை (6) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஒடுக்குமுறைக்கு வழிகோலிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இச்சட்ட வரைவானது பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணம், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, தேடுதல் மற்றும் கைதுகள் தொடர்பில் படையினருக்கான மட்டுமீறிய அதிகாரங்கள், கருத்து வெளிப்பாடு, ஒன்றுகூடல் மற்றும் சங்கங்களை நிறுவுதல் உள்ளிட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரங்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்ட மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவில்லை. அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்புடையவாறும் அமையவில்லை. சிறுபான்மையின மக்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும், மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவோரை இலக்குவைப்பதற்கும் நாட்டில் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டம் மேற்குறிப்பிட்டவாறான மீறல்கள் தொடர்வதற்கு இடமளிப்பதுடன், சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு புறந்தள்ளப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நன்மைகளை இழப்பதற்கும் வழிகோலும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதுடன், நாட்டின் சகல பிரஜைகளினதும் சிவில் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கான பதிலீடாகவே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு ஒரு 'தற்காலிக' ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம், சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் சமூகங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த 46 ஆண்டுகளாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வேரூன்றச் செய்துள்ளது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அல்லது அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு இலங்கை ஒப்புக்கொண்டது. அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்து, புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களை அடுத்து மீளப்பெறப்பட்டு, சில திருத்தங்களுடன் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரவுகளின்படி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் தொடர்பில் 2025 இல் 46 சம்பவங்களும், இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தைக் கொண்டிருப்பதுடன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்துக்குள் 'ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ ஏதேனுமொரு செயலைச் செய்வதற்கோ அல்லது செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கோ தேவையின்றி வற்புறுத்துவது' என்ற விடயம் சிக்கலுக்குரிய விதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னைய வரைவுகளைப் போன்றே இச்சட்டமூலத்திலும் நியாயமான சந்தேகத்தின்பேரிலும், பிடியாணை இன்றியும் ஒருவரை நிறுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும், விசாரிப்பதற்கும், தேடுதல் மேற்கொள்வதற்கும், எந்தவொரு இடத்துக்குள் நுழைவதற்கும், சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலின்கீழ் கொண்டுவருவதற்குமான மட்டுமீறிய அதிகாரங்கள் ஆயுதப்படைகள் மற்றும் கரையோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். இந்நிலையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
-
7 அக்., 2026
www.pungudutivuswiss.com
