-

18 நவ., 2026

www.pungudutivuswiss.com
தமிழர்களுக்குப் பாதகமான விடயங்களே வடகிழக்கில் முன்னெடுப்பு!
[Wednesday 2026-11-18 06:00]



தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமாரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் பல குறைப்பாடுகளும் பொதுவாக காணப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் சுய பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு முன்வைத்த ' வளமான நாடு - அழகான வாழ்க்கை ' கொள்கைத் திட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அரசாங்கம் செயற்படுகிது என்று தெளிவாக விளங்குகிறது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் 194-210 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசிலயமைப்பை உருவாக்குவதாகவும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித குலத்துக்கு எதிராக சட்டங்களை நீக்குவதாகவும்,, பல ஆண்டுகாலமாக தாமதப்படுத்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை ஒரு ஆண்டுக்குள் நடத்துவதாகவும், வாக்குறுதியளிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையேனும் முன்னெடுக்கவில்லை.

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்துக்கான நீதி தொடர்ச்சியாக மறைக்கப்படுகிறது.செம்மணி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஏற்க முடியாது.செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியக விசாரணையை கோரி தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற வேளை அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு சொற்ப அளவில் வழங்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு கைப்பற்றும் முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கிறோம்

மாகாணசபைகளில் உள்ள அரச நிறுவனங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல் அவற்றை மத்திய அரசுக்குள் கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று நிவாரணம் கேட்கும்போது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்காமல், குடும்பத்தை தான் முழுமையாக பொறுப்பேற்கிறேன் என்று குறிப்பிடுவதை போன்று ஜனாதிபதியின் செயற்பாடுகள் உள்ளன.

கிவுல் ஓயா திட்டத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழ் மக்களின் காணிகளும், விவசாய நிலங்களும் இல்லாதொழியும்.இந்த திட்டத்துக்காக பல்லாயிரம் ஹேக்கர் காடுகள் அழிக்கப்படும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் காட்டு யானைகள் மனித குடியிறுப்பை அண்மித்த பகுதிகளுக்கு வரக்கூடும் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தை கைப்பற்றி விட்டோம்.ஆனால் இன்னும் அரச அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்று அமைச்சர் லால் காந்த அண்மையில் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்க கூடியது.ஜனாதிபதியின் உத்தரவுகளை கூட செயற்படுத்தாத அரச அதிகாரிகள் இன்று செயற்படுத்தாமல் உள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிராமிய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.எமது மாவட்டங்களில் நிலவும் வேலையின்மை பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும். மன்னார் - இராமேஸ்வரம் கப்பல் பயணத்தை ஆரம்பித்தால் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றார்.

ad

ad