| “தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்” - விஜய்க்கு எதிராக வெடித்த சீமான்! [Friday 2026-07-17 07:00] |
![]() இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் |
இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை செய்து வரும் ஊடகவியலாளர் அன்பிற்கினிய தம்பி விஜயன் அவர்களை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அழைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்தாரென்பதற்காகவே தம்பி விஜயனைக் காவல்நிலையத்துக்கு அழைத்து மிக மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைக் பிடுங்கி வைத்துக் கொள்வதும், கண்ணியக்குறைவாக நடத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. நாடறியப்பட்ட ஊடகவியலாளரான தம்பி விஜயன் மீது விசாரணை எனும் பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல். 60 நாட்களிலேயே தவெக அரசின் நிர்வாகச்சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதனைப் பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் யாவரும் குறிவைக்கப்படுவதும், அரசின் கம்பிவடத் தொலைக்காட்சியிலிருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமானப் போக்குகள் கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும். திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்! பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைமிக்கப் பெருந்தலைவர்களின் பெயர்களையெல்லாம் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் இன்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், சனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். ஆகவே, தம்பி விஜயன் அவர்களுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை எனும் பெயரில் எவ்வித நெருக்கடியும் தராது, உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்று கூறியிருக்கிறார். |
-
17 ஜூலை, 2026
www.pungudutivuswiss.com
