-

22 அக்., 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் மனித உரிமைகளுக்கு ஆபத்து! [Thursday 2026-10-22 07:00]

www.pungudutivuswiss.com

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சமூகத்திற்குள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதற்கான பாரிய அபாயம் தோன்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஆரம்ப வடிவத்துடன் ஒப்பிடும்போது சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், நீண்ட காலமாக அடக்குமுறையாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டமூலமும் தொடர்ந்தும் மிகவிரிவான மற்றும் தெளிவற்ற பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணங்களைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தைக் விமர்சிப்பவர்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் அவ்வப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாறான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்துக் தீவிரக் கவனமும் பரிசீலனையும் செலுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தின் ஊடாக நடைபெற வேண்டியது கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலிருந்து விலகுவதுதானேயன்றி, அதிகாரிகளுக்கு அடக்குமுறைக்காக மேலும் புதிய கருவிகளை வழங்குவதல்ல எனவும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் பயங்கரவாதம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கும், வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதி வழங்குவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

இதற்கமைய வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் கூட ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பதோடு, இது மனித உரிமைகளையும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையையும் கடுமையாக மீறும் செயலாகும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

ad

ad