| வேலணை பிரதேச சபை காணியில் நினைவேந்தலுக்கு அனுமதி! [Wednesday 2026-11-18 18:00] |
![]() |
வேலணை பிரதேச சபையின் அமர்வில், குறித்த விடயம் தொடர்பான விவாதத்தைப் புறக்கணித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சாட்டி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மாற்று இடமொன்றை வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் வேலணை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய, பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தார். இப்பிரேரணை மீதான விவாதத்தின்போது, அதில் பங்கேற்காமல் ஈ.பி.டி.பியின் மூன்று உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்களும் அன்றைய அமர்வில் சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து, சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய உறுப்பினர்களின் ஏகமனதான இணக்கப்பாட்டுடன், குறித்த காணியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. பிரதேச சபையினால் விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு குறித்த காணியைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை அனுமதி வழங்கியுள்ளதாகத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவித்துள்ளார். மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி 3 உறுப்பினர்களையும், தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், தமிழ் மக்கள் கூட்டணி 1 உறுப்பினரையும், சுயேச்சைக் குழு 3 உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
-
18 நவ., 2026
www.pungudutivuswiss.com
